LATEST NEWS
“அரசியல் களத்தில் த.வெ.க.வின் மாஸ் என்ட்ரி..” மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி..!!
தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி பெற்றுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று த.வெ.க. வேட்பாளர்கள் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் த.வெ.க.வினர் தங்களது வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் மொத்தம் 86.26 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை விட 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் 80.30 சதவீத வாக்குகள் பதிவாகி, 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகள் பெற்று, தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை விட 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
