LATEST NEWS
“கொளுத்தும் வெயிலில் கொத்து புரோட்டா போட்ட மக்கள்…” தோல்விக்குப் பிறகும் முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. அதிரும் அரசியல் களம்
நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, திமுக இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், தவெக-வின் இந்த வெற்றியை “துரோகத்திற்குக் கிடைத்த இடைக்கால வெற்றி” மற்றும் “பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி” என்று குறிப்பிட்டு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிகார பலம், ஆட்சி பலம், பண பலம் மற்றும் போலீஸ் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தியே தவெக இந்தத் தேர்தலில் வென்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம் போன்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து தவெக விதிமீறலில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐந்து நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் மாற்றிவிடுவார் என்று போலி பிம்பம் கட்டமைக்கப்பட்ட முதலமைச்சர் விஜய், இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றத்தில் நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் தெருத்தெருவாக அலைந்து பிரசாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் சாடியுள்ளார்.
ஜி-பேயில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கோடிக்கணக்கில் கொட்டி, அரசு ஊழியர்களையும், வாக்காளர்களையும் மிரட்டி தவெக இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தனது அறிக்கையில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். ஒட்டுமொத்த அமைச்சரவையும் மூன்று வார காலம் இந்தத் தொகுதிகளுக்குள் முடங்கியிருந்ததாகவும், ஆட்சிக்கு எதிரான வாக்குகளே இந்தத் தேர்தலில் பெரும்பான்மையாகப் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட் மாஃபியாக்களின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
