LATEST NEWS
ரொம்ப பெருமை பேசாதீங்க..! யோகி பாபு வந்தாகூட விஜய்ய விட அதிக கூட்டம் கூடும்… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்..!!
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செல்லூர் ராஜு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான மற்றும் அதிரடியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்களைத் தங்கள் பக்கம் இழுக்கத் தவெக முயற்சிப்பதாக எழுந்த பேச்சுக்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டர்களைத் தங்கள் பக்கம் அழைப்பதற்குத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்தவொரு அடிப்படைத் தகுதியும் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகச் சாடியுள்ளார்.
அரசியல் மார்க்கெட்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தற்சமயம் விலை போகாத காரணத்தினால்தான், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை வைத்து தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள் என்று செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். தவெக-வினர் தங்களை எவ்வளவு பெரிய சக்தியாகக் காட்ட முயன்றாலும், அந்தப் பட்டாம்பூச்சிகளின் சாயம் விரைவில் வெளுத்துவிடும் என்று விமர்சித்த அவர், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களின் கூட்டத்தை வைத்துப் பெருமை பேசிக் கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து நடிகர் விஜய்யின் கட்சி மாநாடுகள் மற்றும் கூட்டங்களுக்குக் கூடும் மக்கள் கூட்டம் குறித்துப் பேசிய செல்லூர் ராஜு, சினிமாப் பிரபலங்களைக் காண மக்கள் திரள்வது இயல்பானதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் “நடிகர் யோகி பாபு வருகிறார் என்று சொன்னால்கூட, விஜய்க்கு கூடும் கூட்டத்தை விட அதிகமாகக் கூட்டம் வரும்” என்று ஒரு கிண்டலான ஒப்பீட்டை முன்வைத்துத் தவெக-வை அவர் கடுமையாகச் சாடியுள்ளார். செல்லூர் ராஜுவின் இந்த நையாண்டி மற்றும் ஆவேசமான பேச்சு தற்போது அதிமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே சமூக வலைத்தளங்களில் பெரும் விவாத அலைகளைக் கிளப்பியுள்ளது.
