CRIME
“முருகா இது என்ன சோதனை..?” நூதன முறையில் உண்டியல் திருட்டு… அர்ச்சகரே செய்த விபரீதம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி.. திருச்செந்தூரில் பரபரப்பு..!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள உண்டியலில், காகிதம் மற்றும் துணியை ஒட்டவைத்து கவண் போன்ற முறையில் நூதனமாகப் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் முகுந்தன் மற்றும் அவரது கூட்டாளி திருமுருகன் ஆகியோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிலின் நிரந்தர உண்டியலில் வழக்கமான காணிக்கை எண்ணிக்கையின் போது பண வரவு கணிசமாகக் குறைந்ததால் சந்தேகமடைந்த கோவில் நிர்வாகத்தினர், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை விரிவாக ஆய்வு செய்தனர். அப்போது, அர்ச்சகர் முகுந்தனும் அவரது கூட்டாளியும் இணைந்து உண்டியலுக்குள் இருக்கும் பணத்தை வெளியில் எடுத்துத் திருடும் அதிர்ச்சி காட்சிகள் சிசிடிவியில் துல்லியமாகப் பதிவாகியிருந்தது அம்பலமானது.
சிசிடிவி ஆதாரங்களுடன் கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்த திருச்செந்தூர் போலீசார், அர்ச்சகர் முகுந்தன் மற்றும் திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் 10,000 ரூபாய் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் திருத்தலத்தில், பக்தர்களின் காணிக்கையை அர்ச்சகரே நூதன முறையில் திருடிய இந்தச் சம்பவம் ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
