CRIME
“என் பொண்டாட்டிக்கு மெசேஜ் பண்ணாத..!” எச்சரித்தும் கேட்காத வாலிபர்.. ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவன்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
தூத்துக்குடியில் மனைவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞரின் பாட்டி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் கணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர், கீழ சண்முகபுரம் பகுதியில் வசிக்கும் தனது பாட்டி மெரினாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில், கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவியுடன் சுபாஷ் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சிறு வயது முதலே ஒன்றாகப் பள்ளியில் படித்துப் பழகியவர்கள் என்று கூறப்படுகிறது.
தனது மனைவியுடன் சுபாஷ் பேசுவதை அறிந்த சிதம்பரம், அந்த இன்ஸ்டாகிராம் தொடர்பைத் துண்டிக்குமாறு சுபாஷை பலமுறை எச்சரித்துள்ளார். எனினும், சுபாஷ் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் ஆத்திரமடைந்த சிதம்பரம், தனது நண்பரான டேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த வினிஸ்டன் என்பவருடன் சேர்ந்து பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, அக்டோபர் 27 அன்று இரவு 9 மணியளவில் கீழ சண்முகபுரம் பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது சுபாஷின் வீடு என நினைத்து, அவரது பாட்டி மெரினா வசிக்கும் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து வீசியுள்ளனர். அந்தப் பாட்டில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீப்பற்றிய நிலையில், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சிதம்பரம் மற்றும் வினிஸ்டன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
