CRIME
காதலித்து திருமணம் செய்த தங்கை.. “ஏற்றுக்கொள்கிறோம்” என வரவழைத்து அண்ணன் செய்த கொடூரம்.. கணவர் கொடுத்த ஒற்றைப் புகாரால் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், மாற்று மதத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்ற இந்து இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்காக, நாஜியா (24) என்ற இளம் பெண் அவரது சொந்த சகோதரராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியின் திருமணத்திற்கு நாஜியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி, நாஜியாவின் குடும்பத்தினர் அவரை டெல்லியில் இருந்து மதுராவிற்கு நயவஞ்சகமாக வரவழைத்துள்ளனர்.
மதுரா திரும்பிய நாஜியா, மீண்டும் தனது கணவருடன் செல்ல முயன்றபோது, அவரது அண்ணன் முகமது அக்ரம் (32) நாஜியாவை கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், நாஜியாவின் மரணத்தை மறைப்பதற்காக அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறி, உடலை யாருக்கும் தெரியாமல் அங்குள்ள ஒரு கல்லறையில் அடக்கம் செய்துள்ளனர். தனது மனைவியின் மொபைல் போன் அணைக்கப்பட்டதால் சந்தேகமடைந்த கணவர் ரவீந்திர குமார், ராஜஸ்தான் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த வழக்கு மதுரா போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ணன் அக்ரம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், நீதித்துறை நடுவர் முன்னிலையில் நாஜியாவின் உடல் கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
