LATEST NEWS
“ஹலோ சொன்னா ஆமா, இல்லன்னு தான் பதில் வருது” சொந்த வீட்டிலேயே மனைவியை ஓரங்கட்டிய டாக்டர்; காவல் நிலையம் வரை சென்ற வினோத சண்டை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், ஸ்மார்ட்போன் மற்றும் யூடியூப் ரீல்ஸ் பார்க்கும் பழக்கத்தால் மூத்த மருத்துவர் தம்பதியரின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ள வினோத விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகளிர் நல மருத்துவரான மனைவி, தனது கணவரான அறுவை சிகிச்சை நிபுணர் கடந்த இரண்டு வருடங்களாக யூடியூப்பில் ரீல்ஸ் பார்ப்பதற்கு அடிமையாகிவிட்டார் என்று குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்துள்ளார். கணவர் எப்போதும் மொபைலிலேயே மூழ்கிக் கிடப்பதால் ஆத்திரமடைந்த மனைவி, “எப்போதும் மொபைலைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக நீங்கள் மது குடிக்க ஆரம்பிக்கலாம், அப்போதாவது என்னிடம் அமர்ந்து பேசுவீர்கள்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
ஆக்ராவின் ஹரிபர்வாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இந்த தம்பதியரின் பிள்ளைகள், படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டனர். பகல் முழுவதும் கிளினிக்கில் பிஸியாக இருந்துவிட்டு, மாலையில் வீட்டிற்கு வந்த பின்பும் கணவர் தொடர்ந்து மொபைல் திரையையே பார்த்துக் கொண்டிருப்பதாகவும், எதைக் கேட்டாலும் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே பதிலளிப்பதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த கணவர், தான் குடிப்பழக்கம் போன்ற எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவன் என்றும், மன அழுத்தத்தைப் போக்கவே ரீல்ஸ் பார்ப்பதாகவும் தனது தரப்பு நியாயத்தைக் குடும்ப நல ஆலோசகர்களிடம் வாதிட்டுள்ளார்.
குடும்ப நல ஆலோசனை மையம் இந்த தம்பதியருக்கு இரண்டு முறை கவுன்சிலிங் வழங்கியதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே இருந்த கசப்புணர்வு தற்போது மெல்லக் குறைந்து வருகிறது. இதுகுறித்து உளவியல் பேராசிரியர்கள் எச்சரிக்கையில், தற்காலத்தில் மாமியார்-நாத்தனார் சண்டைகளை விட, கணவன்-மனைவி இடையே அதிகரிக்கும் ‘ஸ்கிரீன் டைம்’ (Screen Time) மற்றும் மொபைல் போன் போதை தான் தம்பதியர் பிரிவதற்குக் முதன்மைக் காரணமாக மாறி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
