CRIME
“நாங்க பண்ணுறது தப்புன்னு எங்களுக்கு தெரியும் ஆனால்” 2 வயது பெண் குழந்தையை கொன்றுவிட்டு… தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்.. பகீர் சம்பவம்…!!
ஹைதராபாத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, தம்பதியினர் தங்களது 2 வயது பெண் குழந்தையைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் குக்காட்டபள்ளி ஹவுசிங் போர்டு (KPHB) காலனி பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் சமதா தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, தங்களது 2 வயது மகள் ஸ்னிக்தாவுடன் வசித்து வந்தனர். செவ்வாய்க்கிழமை அன்று இவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தை படுக்கையறையில் பிணமாகக் கிடந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள் குழந்தைக்கு விஷம் கொடுத்தோ அல்லது கழுத்தை நெரித்தோ கொன்றுவிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தற்கொலைக்கு முன்பாக அந்தத் தம்பதியினர் தங்களது வீட்டின் சுவரில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், “நாங்கள் செய்வது தவறு என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் வேறு வழி இல்லை” என்றும், தங்களது மரணத்திற்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆரம்பக் கட்ட விசாரணையில் கடுமையான பண நெருக்கடியே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. போலீஸார் உடல்களைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
