CRIME
“அந்தப் பெண்ணுக்காகத்தான் கடத்தினோம்..!” 35 நாட்களாக மாயமான ஒரு வயது பெண் குழந்தை.. கடத்தல் கும்பல் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்துபோன போலீசார்..!!
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி அதிகாலை காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை, 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து தனிப்படை போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தை காணாமல் போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். விசாரணையின் முடிவில் ஆந்திராவின் ரேணிகுண்டா பகுதியில் உள்ள மல்லீஸ்வரி என்ற பெண்ணின் வீட்டில் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டு சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அக்ராவரத்தைச் சேர்ந்த சந்தோஷ், பூபாலன், குமரேசன், கௌசல்யா மற்றும் ரேணிகுண்டாவைச் சேர்ந்த மல்லீஸ்வரி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கணவரை இழந்து குழந்தை இல்லாமல் இருந்த மல்லீஸ்வரிக்கு ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து தருமாறு கௌசல்யா தனது கணவர் பூபாலனிடம் கேட்டுள்ளார். இதன் காரணமாகவே இந்த ஒரு வயது குழந்தை கடத்தப்பட்டு மல்லீஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கடத்தலில் கைதான மற்ற நபர்களுக்கு என்ன பங்கு உள்ளது மற்றும் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
