LATEST NEWS
“இது பணி நீக்கம் அல்ல.. 60,000 ஊழியர்களுக்கு வெளியேற வாய்ப்பு..” டிசம்பர் ஃபர்ஸ்ட் வீக் தான் டெட்லைன்..! மைக்ரோசாப்டின் அடுத்தகட்ட மாஸ்டர் பிளான்..!!
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் சுமார் 60,000 பேருக்கு தாமாக முன்வந்து வேலையிலிருந்து விலகுவதற்கான ‘வாலண்டரி எக்சிட் ஆஃபர்’ என்ற புதிய வாய்ப்பை அறிவித்துள்ளது. தலைமை மனிதவள அதிகாரி ஏமி கோல்மேன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நான்கு நாடுகளில் உள்ள குறிப்பிட்ட 70ஆம் நிலை மற்றும் அதற்குக் கீழே உள்ள ஊழியர்களுக்குப் பொருந்தும். வெளியேற விரும்பும் ஊழியர்களுக்கு நிதி உதவியுடன் அடுத்தகட்ட வேலைவாய்ப்புக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். தகுதியுள்ள ஊழியர்கள் டிசம்பர் முதல் வாரத்திற்குள் தங்களது முடிவைத் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேறும் ஊழியர்களுக்கு வழக்கம் போல பதவி நிலை மற்றும் பணிக்காலத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 39 வாரங்களுக்கான அடிப்படைச் சம்பளம், மருத்துவக் காப்பீடு மற்றும் பங்குப் பலன்கள் கிடைக்கக்கூடும். இந்த ஆண்டு ஏற்கெனவே 8,750 ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதியத் திட்டம், ஜூலையில் 4,800 பணியிடக் குறைப்பு மற்றும் செப்டம்பரில் நூற்றுக்கணக்கானோர் பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய திட்டம் அனைவரையும் வெளியேற்றுவதற்காக அல்ல; 60,000 பேர் தகுதி பெறுகிறார்கள் என்பதால் அனைவரும் வெளியேறுவார்கள் என்ற அர்த்தமில்லை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது. தரவு மையங்கள் மற்றும் கணினி உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக செலவாவதால், செயல்பாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் வணிகத் தேவைகளுக்கேற்ப பணியாளர்களை மாற்றியமைக்கவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முயற்சி நிறுவனத்தின் பணியாளர் திட்டமிடலில் புதிய அணுகுமுறையாகவும், ஏஐ வளர்ச்சிக்காக நிறுவனங்கள் தங்களை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதற்கான சான்றாகவும் பார்க்கப்படுகிறது.
