LATEST NEWS
“எனக்கு வாழப் பிடிக்கல… அதான் இப்படி பண்ணேன்…” தற்கொலை முயற்சியால் நேர்ந்த கொடூரம்.. 7வாகனங்களை அடித்து நொறுக்கிய வாலிபரின் திடுக்கிடும் வாக்குமூலம்..!!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை 183-ல் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8.15 மணியளவில் 7 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்து நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், 5 கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பலத்த சேதமடைந்தன. விபத்து நடந்த சில வினாடிகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில், குட்டிக்கல் புத்தூரைச் சேர்ந்த 27 வயது இளைஞரான ஷரோனின் பிலிப் ஓட்டி வந்த கார் அதிவேகத்தில் சென்றது நிரூபணமாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பாக பிலிப் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிலிப்பின் அதிவேக கார் பின்னால் இருந்து பலமாக மோதியதில், மதுக்காவைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் (35), அவரது மனைவி ஷாலினி (30), மற்றும் குழந்தைகள் அத்வைத் (9), ஆவணி (4) ஆகியோர் பயணித்த ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் 4 வயது சிறுமி ஆவணி படுகாயமடைந்தாள். மேலும், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் மற்றும் நெடுஞ்சாலையில் நுழையக் காத்திருந்த கார் மீதும் அந்த வாகனம் மோதியது. இந்த விபத்தில் அன்சாரி (65), சாஹில் (31), பி.வி. ராஜன் (65), ரேவந்த் (12), ஸ்ரேவந்த் (11) மற்றும் ராஜு (71) ஆகியோரும் காயமடைந்த நிலையில், மூவர் முதற்கட்ட சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
மோதலுக்குப் பிறகு தனது காருக்குள் சிக்கிக்கொண்ட பிலிப்பை, உள்ளூர் மக்களும் தீயணைப்புப் படையினரும் இணைந்து மீட்டனர். தானும் காயமடைந்து கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிலிப், தான் தற்கொலைக்கு முயன்றதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
