CRIME
“எல்லாரும் டூர் போயிருக்கோம், நெட்வொர்க் இல்ல” 7 பேரை கொன்றுவிட்டு மொபைல் மெசேஜ் மூலம் நாடகமாடிய சைக்கோ கார் ஓட்டுநர்.. உடந்தையாக இருந்த 17 வயது மகளுக்கு போலீஸ் வலைவீச்சு..!!
பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்த கார் ஓட்டுநர் இந்துசேகரின் கொடூரமான குற்றப் பின்னணியும், சாதுரியமான ஏமாற்று வேலைகளும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளன. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதியே இந்த தொடர் கொலைச் சம்பவங்களை இந்துசேகர் அரங்கேற்றத் தொடங்கியுள்ளார். தப்பியோடி தலைமறைவாக இருக்கும் அவனது 17 வயது மகள், இந்த ஜடலமான குற்றங்களைச் செய்வதற்கும், சான்றுகளை மறைப்பதற்கும் தந்தைக்கு உதவியிருக்கலாம் என்ற புதிய அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதப் பாணியில், கொலை செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களைத் தன் வசம் வைத்திருந்த இந்துசேகர், உறவினர்களுக்குச் சந்தேகம் வராதவாறு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். “நாங்கள் அனைவரும் வெளியில் சுற்றுலா வந்துள்ளோம், இங்கு நெட்வொர்க் சிக்னல் மிகவும் பலவீனமாக உள்ளது” என்று போலி தகவல்களை அனுப்பி அனைவரையும் முட்டாளாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தனது மனைவி மற்றும் மாமியாரைக் கொலை செய்த உடனேயே, போலீசாரின் கவனத்தைத் திருப்புவதற்காக ஸ்ரீராம்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று அவர்கள் இருவரும் காணாமல் போய்விட்டதாக அவரே புகாரும் அளித்துள்ளார்.
இருப்பினும், மாயமானதாகக் கூறப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் மொபைல் எண்கள் அனைத்தும் ஒரே டவர் லொகேஷனில் இயங்குவதைத் தொழில்நுட்பப் பகுப்பாய்வு மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையிலேயே இந்துசேகரை வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியபோது 7 பேர் படுகொலை விவரம் வெளிவந்தது. பத்திரிகைத் துறையில் படித்து சில காலம் நிருபராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இந்துசேகர், அந்த சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தியே போலீஸாரை திசைதிருப்ப முயன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
