CRIME
“அண்ணா நான் இத பண்ணிட்டேன்..” பைக் வாங்கித் தர மறுத்த தந்தை.. அண்ணனுக்கு போன் செய்துவிட்டு போதையில் தம்பி செய்த கொடூரம்.. பதறவைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் நகரில், தனக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கித் தர தந்தை மறுத்ததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான 20 வயது கல்லூரி மாணவர் ஜஸ்வந்த் தேஜா, கஞ்சா புகைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த், தனது நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கிப் படித்து வந்தார். அவர் தனது தந்தையிடம் தனக்கு ஒரு அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், தற்போது வீடு கட்டும் பணி நடந்து வருவதால் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கித் தர முடியாது என்றும், அதற்குப் பதிலாகச் சாதாரண பைக் வாங்கித் தருவதாகவும் தந்தை கூறியுள்ளார்.
தந்தையின் மறுப்பால் கடுமையான விரக்தியடைந்த ஜஸ்வந்த், கடந்த அக்டோபர் 14 அன்று தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று கஞ்சா புகைத்துள்ளார். பின்னர் ஹைதராபாத்தில் வசிக்கும் தனது அண்ணன் சரணுக்குத் தொடர்பு கொண்டு, தான் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். பதற்றமடைந்த அண்ணன் உடனடியாக தம்பியின் நண்பர்களுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் ஜஸ்வந்தை மீட்டு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் போராடி வந்த ஜஸ்வந்த், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். வாலிபர்களின் பைக் மோகமும், போதை பழக்கமும் ஒரு இளம் உயிரைப் பறித்துள்ள இந்தச் சம்பவம் கம்மம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
