CRIME
“உனக்கு அரசு வேலை வாங்கித் தாரேன்…” நம்பிப் போன சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆசை காட்டி மோசடி செய்த போலி அதிகாரி… 2 நாள் ரகசிய வேட்டையில் சிக்கிய திடுக்கிடும் பின்னணி..!!
பீகார் மாநிலம் பாட்னா நகரில், அரசுப் பணியில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை, போலிஸ் அதிகாரிகளே தொழிலாளர்கள் போல மாறுவேடமிட்டுச் சென்று குஜராத் மாநிலம்சூரத்தில் கைது செய்துள்ளனர். ரோஹ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் துபே என்ற அந்த நபர், தன்னை ஒரு காவல்துறை அதிகாரியாகக் காட்டிக் கொண்டு இந்தத் துயரச் செயலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற பாட்னா காவல்துறையைச் சேர்ந்த எஸ்.ஐ. சஞ்சீவ் குமார் மற்றும் எஸ்.ஐ. சித்தார்த் குமார் ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவினர், சூரத்தில் இரண்டு நாட்களாகத் தொழிலாளர்கள் போல வேடமணிந்து குற்றவாளியின் நடமாட்டத்தைக் கண்காணித்துத் துப்பு துலக்கினர். இதனையடுத்து, சூரத்தில் உள்ள இச்சாபூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட தபோவன் சொசைட்டியில் பதுங்கியிருந்த அபிஷேக் துபேவை காவல்துறையினர் வெற்றிகரமாகக் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த மோசடி வழக்கில், குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் விருந்தினர் விடுதி உரிமையாளர் அங்கித் குமார் என்பவரும் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், போலியான அரசு வேலை ஆசைகளைக் காட்டி இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போக்ஸோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சங்கிதா சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
