CRIME
அடச்சீ.. 2 மாத கர்ப்பிணி என்றும் பாராமல்… காவல் நிலையத்திற்குள் கூட்டு வன்கொடுமை.. ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், காவல் நிலையத்திற்குள் இரண்டு மாத கர்ப்பிணிப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரஜ்மோகன் யாதவ் மற்றும் ஆய்வாளர் வேவ்பால் சிங் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று, கைது செய்யப்பட்ட தனது கணவரைப் பற்றி விசாரிக்கவும் உதவி கேட்கவும் காவல் நிலையம் சென்ற அந்தப் பெண்ணை, அங்குள்ள காவல்துறை அதிகாரிகளே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளித்தபோது உள்ளூர் போலீசார் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதனால் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடிய பிறகே வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது, ஆனால் அந்த விசாரணை அமைப்பும் குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி வழக்கைக் மூட முயன்றது.
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கைக்கு எதிராகத் தனது ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்து சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தார். சஹாரன்பூர் நீதிமன்றத்தில் சுமார் 11 ஆண்டுகள் நீடித்த இந்த நீண்ட நெடிய நீதிக்கான சட்டப் போராட்டத்தின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. நீதிபதி அவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பு வெளியான உடனேயே இரு குற்றவாளிகளும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காக்கும் கரங்களே வேலியாக மாறிய இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
