CRIME
“காக்கும் காவலரே எமனான கொடூரம்..!” 3 மாத கர்ப்பிணி மனைவியைக் கொன்று கோதாவரி ஆற்றில் வீசிய போலீஸ் கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏஆர் காவல்துறை காவலர் நரேந்தர், தனது மூன்று மாத கர்ப்பிணி மனைவியான பவானியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலைக் கோதாவரி ஆற்றில் வீசிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முலுகு மாவட்டத்தைச் சேர்ந்த பவானியைச் சமூக வலைத்தளம் மூலம் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நரேந்தர், கொத்தகூடத்தில் உள்ள பிரகதி நகரில் வசித்து வந்தார். தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பவானியைக் கொலை செய்த நரேந்தர், அவரது உடலை ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க உடலைக் கோதாவரி ஆற்றில் வீசிவிட்டு, தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாக வியாழக்கிழமை இரவு காவல்துறையினரிடம் நாடகமாடியுள்ளார்.
நரேந்தரின் நடத்தையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, தான் மனைவியைக் கொலை செய்து கோதாவரி ஆற்றில் உடலை வீசியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை முதல் ஆற்றில் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின் விளைவாக, புர்கம்பாடு மண்டலம் கும்முரு பகுதிக்கு அருகே பவானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. காக்கும் தொழிலில் இருக்கும் காவலரே தனது கர்ப்பிணி மனைவியைக் கொன்று ஆற்றில் வீசிய இந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம் குறித்து கொத்தகூடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
