LATEST NEWS
அம்மா அம்மா… தூக்கில் தொங்கிய தாய்… இரவு முழுவதும் அழுது அழுது காலடியிலேயே மயங்கிய குழந்தை..! பதற வைக்கும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அடோனியைச் சேர்ந்தவர் சுவாதி. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஸ்ரீயன் என்ற 3 வயது மகன் உள்ளார். இதற்கிடையில் குடும்பச் சண்டைகள் காரணமாக, சுவாதி கடந்த ஒரு வருடமாகத் தன் கணவரைப் பிரிந்து தனது சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்நிலையில் சுவாதியின் தாய் நேற்று மாலை தன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நேரத்தில், சுவாதி தனது படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூக்கில் தொங்கிய தாயின் கால்களைப் பிடித்து 3 வயது சிறுவன் ஸ்ரீயன் அழுது துடித்ததுடன், இரவு முழுவதும் தன் தாயை நினைத்து அழுதுகொண்டே இருந்துள்ளான். பின்னர் காலையில் நாற்காலியில் மயங்கிச் சரிந்து விழுந்தான். இதற்கிடையில் சுவாதி கதவைத் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவுகளை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுவாதி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். மேலும் தற்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட நாற்காலி அருகே குழந்தை ஸ்ரீயன் சுயநினைவின்றி கிடந்தான்.
ஆரம்பத்தில் குழந்தையும் இறந்துவிட்டதாகப் போலீசார் நினைத்தனர், ஆனால் அவர்கள் குழந்தையைப் பலமாகத் தட்டியபோது குழந்தை கதறி அழுதான். தனிமையைத் தாங்க முடியாமல் தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக சுவாதியின் தாய் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ஆதாரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
