LATEST NEWS
“பட்டாசு வெடிச்சா நோய் குணமாகும்..” மைக்கில் பேசும்போது கேட்ட வெடி சத்தம்… சட்டென எம்.எல்.ஏ சொன்ன “விசித்திர” காரணம்..!!
மேற்கு வங்க மாநிலம் டாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. பாபியா அதிகாரியின் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பட்டாசுகள் வெடித்தால் பல நோய்கள் குணமாகும் என்று அவர் அண்மையில் விசித்திரமான கருத்து ஒன்றை எழுப்பியுள்ளார். அவரது இந்த உரை தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தனது தொகுதியில் நடைபெற்ற காளி பூஜை பந்தல் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாபியா அதிகாரி மேற்கண்டவாறு கூறினார். அப்போது அவர் மைக்கில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் ஒரு பட்டாசு பலத்த சத்தத்துடன் வெடித்தது. அந்தச் சூழலில்தான் அவர் தனது பேச்சைத் தொடர்ந்துகொண்டே இந்த விநோத கருத்தைத் தெரிவித்தார்.
மேலும், காளி பூஜை என்பது பட்டாசுகள் இல்லாமல் முழுமையடையாது என்றும், அதனால் நாங்கள் கண்டிப்பாகப் பட்டாசுகளை வெடிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது காவல்துறை மற்றும் அரசு நிர்ணயித்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
