CRIME
“சீக்கிரம் கோடீஸ்வரான ஆகணும்..” AI சொன்னதை நம்பி 4 வயது சிறுவனின் உடல் உறுப்புகளைத் திருடிய சித்தப்பா.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில், விரைவில் கோடீஸ்வரராக வேண்டும் என்ற ஆசையில் 27 வயது வாலிபர் ஒருவர் மனிதநேயமற்ற முறையில் தனது 4 வயது தம்பி மகனை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். வாசுதேவ் ராம் என்ற அந்த நபர், சிறுவன் ஜிதேந்திரனைக் கொலை செய்த பிறகு அவனது இரண்டு கண்கள், நுரையீரல்கள் மற்றும் சிறுநீரகங்களை அகற்றியுள்ளார். ஏஐ அரட்டை மூலம் சிறுவர்களின் உடல் உறுப்புகள் கோடிக்கணக்கில் விற்கும் என்று தெரிந்து கொண்டதால், அவர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். மாவட்டத்தின் சன்னா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஆம்டச்சுவா கிராமத்தின் அருகே நடந்த இந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாகக் குற்றவாளி காவல்துறையினரின் பிடியில் உள்ளார்.
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மாலை ஆம்டச்சுவா கிராமத்திற்கு அருகில் சோளக் காட்டில் மரத்திற்கு அடியில் தண்ணீர் நிரம்பியிருந்த குழி ஒன்றில் சிறுவனின் சடலம் மிதப்பது கண்டறியப்பட்டது. கிராம மக்கள் உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதே நாள் காலையில், உயிரிழந்த சிறுவனின் தந்தை அபிஜித் ராம் கோர்வா, தனது 4 வயது மகன் நவம்பர் 5 ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழியிலிருந்து சடலத்தை மீட்டனர்; அப்போது சிறுவனின் உடல் வெட்டப்பட்டிருந்ததையும், அவனது இரு கண்கள், நுரையீரல்கள் மற்றும் சிறுநீரகங்கள் காணாமல் போயிருந்ததையும் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குற்றவாளி வாசுதேவ் ராம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். விசாரணையில், குறைந்த கல்வி மட்டுமே கற்றிருந்த அந்த நபர் ஏஐ-யுடன் பேசி வந்ததாகவும், அந்த ஏஐ-யை உடல் உறுப்புகளை வாங்கும் வாடிக்கையாளராக அவர் நினைத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று சிறுவனின் தந்தையுடன் மது அருந்திய குற்றவாளி, பின்னர் சிறுவன் ஜிதேந்திரனை விளையாட அழைத்துச் செல்வது போல் கூறி காடு மற்றும் அணைப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மதுபோதையில் சிறுவன் தூங்கியதும் அவனது கழுத்தை அறுத்து, கத்தியால் உடலைக் வெட்டி சிறுநீரகங்கள், இரு கண்கள் மற்றும் நுரையீரல்களை ஒரு வாளியில் சேகரித்துள்ளார். மேலும், எஞ்சிய சடலத்தை ஒரு சாக்குமூட்டையில் கட்டித் தண்ணீர் குழிக்குள் வீசி எறிந்துள்ளார்.
