CRIME
“கடவுளே… எங்களை மீண்டும் நடுத்தர வர்க்கத்தினராகப் படைக்காதே” ரூ.50,000 கடனால் உருக்கமான கடிதம் எழுதி வைத்து தம்பதி தற்கொலை..!!
வாரங்கல் மாவட்டம் ரங்கசாய்பேட்டையில், ரூ.50,000 கடனுக்காக வாரம் ரூ.750 வட்டி கட்ட முடியாமல் தவித்த தம்பதியினர், தங்களது செல்லப் பிராணியான நாயையும் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்லபோகுல சஞ்சய் குமார் (60) மற்றும் அவரது மனைவி ஷோபா (53) ஆகியோரே கடன் நெருக்கடி காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
இவர்கள் தையல் தொழில் செய்யும் பெண் ஒருவரிடம் ரூ.50,000 கடன் வாங்கியதாகவும், அதற்கு வாரந்தோறும் ரூ.750 வட்டி செலுத்தி வந்ததாகவும் தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். வட்டி பணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் அந்தப் பெண் தங்களைக் கடுமையாக அவமானப்படுத்தியதாகவும், கடன் தொல்லை மற்றும் நிதி நெருக்கடியே தங்களது தற்கொலைக்குக் காரணம் என்றும் அந்தக் கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளனர்.
“கடவுளே… எங்களை மீண்டும் நடுத்தர வர்க்கத்தினராகப் படைக்காதே” என மனதை உலுக்கும் வாசகங்களை எழுதியுள்ள அந்தத் தம்பதியினர், தங்களது இறுதிச் சடங்குகளைத் தங்களது செல்ல நாயின் இறுதிச் சடங்குகளுடன் இணைந்து நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
