LATEST NEWS
“தவெக-வின் 60 எம்எல்ஏக்கள் அதிருப்தி… ஆட்சி மாற்றமா இல்ல குடியரசுத் தலைவர் ஆட்சியா..?” திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கொளுத்திப்போட்ட குண்டு.. உச்சகட்ட பரபரப்பில் அரசியல் களம்..!!
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் சுமார் 50 முதல் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குதிரை பேரத்தில் ஈடுபடும் அளவிற்குத் திமுகவிடம் பணம் இல்லை என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்து 60 முதல் 70 தவெக எம்எல்ஏக்கள் தனியாகப் பிரிந்து வந்து நல்லாட்சி கொடுக்க நினைப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளதாகக் கூறினார். இதேபோல் அதிமுகவிலும் சுமார் 30 பேர் அதிர்ச்சியில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அதிருப்தியில் இருக்கும் தவெக எம்எல்ஏக்களை அக்கட்சித் தலைமையால் சமாதானப்படுத்த முடியாத சூழலே நிலவுவதாகவும் ரகுபதி விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தவெக-விற்கு 109 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர்களில் 60 பேர் பிரிந்து வந்தால் அது பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையாக இருக்கும் என்பதால், தாங்களே உண்மையான கட்சி என உரிமை கோர சட்டப்படி வாய்ப்புள்ளதாக ரகுபதி விளக்கமளித்துள்ளார். இத்தகைய சூழல் உருவானால் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் அல்லது ஆளுநர் சட்டமன்றத்தை முடக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் மீண்டும் தேர்தல் வந்தால், தமிழ்நாட்டு மக்கள் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தத் தயாராக இருப்பதால் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும், தாங்கள் சுமையை இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
