LATEST NEWS
“பகல் நேரமா இருந்ததால தப்பிச்சேன்.. இதுவே ஒரு பொண்ணா இருந்தா..?” காரில் ஏசி போடச் சொன்னதற்கு நடுரோட்டில் இறக்கிவிட்ட டிரைவர்..50 நிமிடங்கள் தவித்த வாலிபர்..!!
பெங்களூருவில் காரில் ஏசி இயக்குமாறு கேட்ட சிறிய கோரிக்கைக்காக ஒரு பயணி நடுவழியில் இறக்கிவிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 34 வயது நபர் ஒருவர் சமூக வலைதளமான ‘X’ தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது அனுபவத்தைக் கூறியுள்ளார். பெங்களூரு விமான நிலையத்திலிருந்து HSR லேஅவுட் செல்ல ரூ. 1,100 கட்டணத்தில் உபர் காரை முன்பதிவு செய்ததாகவும், வழியில் சாலைப் பணிகளால் தூசியும் புகையும் அதிகமாக இருந்ததால் மூச்சு விட சிரமப்பட்டு ஏசியை ஆன் செய்யக் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது ஏசி இயக்குவதற்குப் பதிலாகக் கோபமடைந்த ஓட்டுநர் கன்னடத்தில் பேசியதுடன், கன்னட மொழியில் பேசுமாறு அழுத்தம் கொடுத்து, திடீரென காரை நிறுத்தி பயணத்தை பாதியிலேயே முடித்து, கிரெடிட் கார்டில் முழு கட்டணமும் செலுத்தப்பட்ட நிலையிலும் அவரைப் பொருட்களுடன் ஒரு தெரியாத, ஆள் நடமாட்டமில்லாத சாலையோரத்தில் தனியாக விட்டுச் சென்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தாம் சுமார் 50 நிமிடங்கள் அங்கேயே சிக்கித் தவித்ததாகவும், உபர் நிறுவனம் மாற்றுக் கார் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை என்றும் அந்தப் பயணி வீடியோவில் வேதனை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்ற இரண்டு கார் ஓட்டுநர்கள் கன்னடம் தெரியாததால் தம்மை மிரட்டியதாகவும், அதில் ஒருவர் முதலில் இந்தி தெரியாதது போல் நடித்துப் பின்னர் இந்தியிலேயே பேசியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பகல் நேரத்தில் ஒரு ஆணாக இருந்ததால் தாம் சமாளித்துவிட்டதாகவும், ஆனால் தமக்குப் பதிலாகத் தனியாக ஒரு பெண் இருந்து இரவு நேரமாக இருந்திருந்தால் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்றும் அவர் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்; மேலும் தனது பயணம் ரத்து செய்யப்பட்ட உடனேயே ஓட்டுநருக்கு அடுத்த முன்பதிவு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், நேரடிச் செய்தி மூலம் தொடர்பு கொண்டுள்ளதாக உபர் நிறுவனம் அந்தப் பயணியின் பதிவுக்குப் பதிலளித்துள்ளது. மறுபுறம், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது; ஒரு தரப்பினர் பெங்களூரு கார் ஓட்டுநர்களின் நடத்தை குறித்து விமர்சித்து வரும் நிலையில், பலரும் இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் ஓட்டுநரின் தரப்பைக் கேட்காமல் முடிவுக்கு வருவது தவறு என்றும் இதற்கு மொழிப் பிரச்சனை சாயம் பூசக் கூடாது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
