LATEST NEWS
இலவச ஊசிக்கு பணமா..? கேன்சர் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய கொடூரம்… 15,000 பேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பல்… அதிர்ச்சிப் பின்னணி..!!
புற்றுநோய் மருந்துகள் மற்றும் போலி மருந்துகள் விற்பனை செய்து சுமார் 15,000 நோயாளிகளை ஏமாற்றிய கும்பலின் தலைவன் பிரசாந்த் பாபுவை டெல்லி போலீசார் பெங்களூருவில் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழுவால் (SIT) கைது செய்யப்பட்டிருந்த இவரை, டெல்லி மோதிபாக் காவல் நிலையத்தில் பதிவான ₹2 கோடி மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்துள்ளனர்.
சுமார் ₹5 லட்சம் மதிப்புள்ள இரண்டு புற்றுநோய் ஊசிகளை வாங்கும்போது நிறுவனம் சார்பில் ஒரு ஊசி இலவசமாக வழங்கப்படுவதை நோயாளிகளிடம் மறைத்து, அந்த இலவச ஊசிகளுக்கும் பிரசாந்த் பாபு பணம் வசூலித்துள்ளார். மேலும், சிகிச்சையின்போது நோயாளிகள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து மீதமுள்ள ஊசிகளைத் திரும்பப் பெற்று, அவற்றை மற்ற நோயாளிகளுக்கு முழு விலைக்கு விற்று மீண்டும் மீண்டும் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் நூற்றுக்கணக்கான மருந்தகங்கள் வழியாக இவரது நெட்வொர்க் செயல்பட்டு வந்துள்ளது. இந்த மோசடி வலையமைப்பில் தொடர்புடைய பிற நபர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பங்கு குறித்து டெல்லி போலீசாரும் கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழுவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
