CRIME
“என் மகளுடன் பழகுவியா..?” 20 வயது இளைஞரைத் தீர்த்துக்கட்ட ரூ.10 லட்சம் கொடுத்து கூலிப்படை ஏவிய தந்தையும் அண்ணனும்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான பகீர் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில், தனது மகளுடன் பழகியதற்காக 20 வயது இளைஞர் ஒருவரைத் தந்தையும் சகோதரனும் சேர்ந்து ரூ.10 லட்சம் கூலிப்படைக்குக் கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாகாட்டைச் சேர்ந்த ஜீவன் படேல் மற்றும் அவரது மகன் அசுதோஷ் படேல் ஆகியோரே இந்தப் பகீர் கொலைச் சதிக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 20 வயதான ரியான்ஷ் சௌஹான் என்ற இளைஞர், தங்களது வீட்டுப் பெண்ணுடன் நட்பாகப் பழகி வந்ததைத் தந்தையாலும் சகோதரனாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ரியான்ஷை உயிரோடு விடக்கூடாது என முடிவெடுத்த அவர்கள், கூலிப்படையினருக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுத்து அவரைத் தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்துள்ளனர்.
திட்டத்தின்படி, கூலிப்படையினர் ரியான்ஷ் சௌஹானை ஆள் நடமாட்டமில்லாத தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து, அவர் போதையில் இருந்தபோது இரும்புக் கம்பியால் தலையில் பலமாகத் தாக்கி மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், இந்தக் கொலையை மறைப்பதற்காகவும், பார்ப்போருக்கு இது ஒரு சாதாரண சாலை விபத்து போலத் தோன்ற வேண்டும் என்பதற்காகவும், ரியான்ஷின் உடலை அவரது ஆக்டிவா இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
முதலில் இது ஒரு சாலை விபத்து என்று கருதப்பட்ட நிலையில், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையிலும், உடலில் இருந்த காயங்களின் தன்மையை ஆய்வு செய்தபோதும் இது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது. கௌரவக் கொலை என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட இந்தப் படுபயங்கரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தந்தை ஜீவன் படேல், மகன் அசுதோஷ் படேல் மற்றும் கூலிப்படையினர் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
