LATEST NEWS
“அம்மா, அப்பா…” அலறிய பிஞ்சுக் குழந்தைகள்.. நின்றிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதியதில் 4 குழந்தைகள் துடிதுடித்து பலி.. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில் செவ்வாய்க்கிழமை காலை ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் கோர சாலை விபத்து ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து மீது அதிவேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர், மேலும் சுமார் 20 குழந்தைகள் காயமடைந்தனர். மோதலின் வேகத்தில் பள்ளிப் பேருந்தின் பின்பகுதி பலத்த சேதமடைந்ததோடு, பேருந்துக்குள் சிக்கிய குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டது.
கௌசாம்பியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சொந்தமான இந்தப் பேருந்தில் சுமார் 50 மாணவர்களும், ஆறு ஆசிரியர்களும் மதுராவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் கௌசாம்பிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். தாத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விரைவுச்சாலையின் 210-வது மைல்கல் அருகே, ஓட்டுநர் கழிவறைக்குச் செல்வதற்காகப் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தியிருந்தார். அப்போது ஆக்ரா பக்கத்திலிருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி, நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது.
விபத்துச் சத்தம் கேட்டு விரைந்து வந்த வழிப்போக்கர்களும், தகவலறிந்து வந்த தாத்தியா காவல்துறையினரும் பேருந்துக்குள் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கன்னோஜ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் அசுதோஷ் மோகன் அக்னிஹோத்ரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் ஆகியோர் காயமடைந்த குழந்தைகளின் உடல்நலம் குறித்தும், சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
