LATEST NEWS
“சிக்கிய 31 ஏலக்காய் மூட்டைகள்” தீ விபத்தில் எரிந்ததாகக் கூறப்பட்டது ஆனால்… செக்கானூரணி லாக்கப் மரண வழக்கில் திடீர் டுவிஸ்ட்..!!
செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தேவாரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூட்டைகளை சிபிசிஐடி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), கடந்த நவம்பர் 3-ஆம் தேதி ஏலக்காய் மூட்டைகள் மற்றும் பார்சல்களை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கிச் சென்றபோது, உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் பகுதியில் லாரி தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்பட்டது. இந்தத் தீ விபத்தில் சுமார் 67 மூட்டை ஏலக்காய்கள் எரிந்து நாசமாகிவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நவம்பர் 13-ஆம் தேதி இரவு செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட பாலகிருஷ்ணன், மறுநாள் அதிகாலை காவல் நிலையக் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது முக்கியத் தடயம் சிக்கியுள்ளது. தீ விபத்தில் எரிந்துவிட்டதாகக் கூறப்பட்ட ஏலக்காய் மூட்டைகளில், 31 மூட்டைகள் (சில தகவல்களின்படி 32 மூட்டைகள்) தேவாரம் அருகேயுள்ள பாலகிருஷ்ணனின் நண்பர்களான அன்பரசன் மற்றும் அருண் ஆகியோரின் தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சோதனையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, ரூ.45 லட்சம் மதிப்புள்ள அந்த ஏலக்காய் மூட்டைகளைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், இச்சம்பவத்தின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
