LATEST NEWS
டாக்டராகி உயிர் காக்க நினைத்த மாணவன்.. தீபாவளி விடுமுறையில் நடந்த பயங்கர விபத்து… மூளைச்சாவு அடைந்த இளம் மாணவரால் 6 பேருக்குக் கிடைத்த மறுவாழ்வு..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான ஏழுமலையின் 19 வயது மகன் தேவன், நெல்லையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்தார். தீபாவளி பண்டிகை விடுமுறையில் சொந்த ஊரான கீழிருப்புக்கு வந்திருந்த அவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி நெல்லித்தோப்பு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த தேவன் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து தேவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். அவரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன; மேலும் தானமாக வழங்கப்பட்ட கண்கள் மூலம் இரு நபர்களுக்குப் பார்வை கிடைத்ததால், மொத்தம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
