CRIME
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” தங்கைக்கு வந்த கடைசி போன் கால்.. வண்டியைப் பஞ்சராக்கி 4 கொடூரர்கள் செய்த வெறிச்செயல்.. 14 நிமிடங்களில் மருத்துவர் திஷாவுக்கு நடந்த கொடூரம்..!!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாத்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது கால்நடை மருத்துவர் திஷா. இவர் தினமும் காலையில் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு, நெடுஞ்சாலையில் உள்ள தொண்டுபள்ளி சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து வாடகைக் கார் அல்லது பேருந்து மூலம் சம்ஷாபாத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று மாலை 5 மணிக்குப் பணி முடிந்த நிலையில், தோல் நோய்க்கான மருத்துவ ஆலோசனைக்காகச் சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் சுங்கச்சாவடிக்குத் திரும்பினார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தின் பின் சக்கரம் பஞ்சராகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் லாரிகளை நிறுத்தியிருந்த முகமது ஆரிப் மற்றும் ஜொள்ளு சிவா ஆகியோர் உதவி செய்வது போல நடித்துப் பேச்சுக் கொடுத்தனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த திஷா, இரவு 9:30 மணியளவில் தனது தங்கைக்கு போன் செய்து, தனக்குப் பயமாக இருப்பதாகவும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்குமாறும் கூறினார். வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு வாடகைக் காரில் வீட்டிற்கு வருமாறு தங்கை அறிவுறுத்திய போதிலும், வண்டி திருடு போய்விடுமோ என்ற அச்சத்தில் திஷா அங்கேயே காத்திருந்தார். ஆனால், இரவு 9:44 மணிக்கு அவரது தங்கை மீண்டும் தொடர்பு கொண்டபோது திஷாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு ஆகியும் மகள் வீடு திரும்பாததால் பதறிப்போன குடும்பத்தினர் சுங்கச்சாவடிக்குச் சென்று தேடியும் திஷாவையும் வாகனத்தையும் காணவில்லை. உடனடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, எல்லைப் பிரச்சினையைக் காரணம் காட்டி காவல்துறையினர் அலட்சியம் காட்டியதால், விடிய விடிய நெடுஞ்சாலையில் குடும்பத்தினர் மகளைத் தேடி அலைந்தனர்.
இந்நிலையில், நவம்பர் 28-ஆம் தேதி அதிகாலை 7:30 மணியளவில், சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தன்பள்ளி மேம்பாலத்திற்கு அடியில் பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதைப் பால்காரர் ஒருவர் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அங்குக் கிடந்த ஆடைகள் மற்றும் உடமைகளை வைத்து அது திஷாவின் உடல்தான் என்பதைக் குடும்பத்தினர் உறுதி செய்தனர். பிரேதப் பரிசோதனையில், அவர் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட பிறகு, மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்தச் செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி, நாடாளுமன்றம் வரை எதிரொலித்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பொதுமக்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகள் மூலம் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர்களான முகமது ஆரிப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன் மற்றும் சிந்தகுண்டா சென்னகேசவலு ஆகிய நான்கு பேரையும் நவம்பர் 29-ஆம் தேதி கைது செய்தனர். விசாரணையில், நவம்பர் 26-ஆம் தேதியே திஷாவைக் குறிவைத்துச் சதித்திட்டம் தீட்டியதும், 27-ஆம் தேதி இரவு மதுபோதையில் திட்டமிட்டே அவரது வண்டியின் டயரைப் பஞ்சராக்கியதும் அம்பலமானது. உதவி செய்வது போல நடித்துத் திஷாவை லாரிக்குள் இழுத்துச் சென்ற நான்கு பேரும், வலுக்கட்டாயமாக மதுவைக் புகட்டி, வாயில் துணியைத் திணித்துக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, உண்மை வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் கழுத்தை நெரித்துக் கொன்று உடலை எரித்ததை ஒப்புக்கொண்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், 2019 டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை, குற்றம் நடந்த விதத்தை நடித்துக் காட்டுவதற்காக (Crime scene recreation) நான்கு பேரையும் காவல்துறையினர் சத்தன்பள்ளி மேம்பாலத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, குற்றவாளிகள் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட முயன்று தப்பிக்கப் பார்த்ததாகவும், தற்காப்புக்காகக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் (Encounter) நான்கு குற்றவாளிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை அறிவித்தது.
