CRIME
“அய்யோ நெஞ்சம் பதறுகிறது..” காற்றில் பறந்து வந்த எமன்.. ஸ்கூட்டர் ஓட்டிய பெண் உயிர் தப்பியதே பெரிய அதிசயம்.. திக் திக் வீடியோ..!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில், ஈரமான சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டை மீது சரக்கு வாகனம் மோதியதில், அந்தத் தடுப்பு தூக்கி வீசப்பட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மோதிய அதிர்ச்சி விபத்து நிகழ்ந்துள்ளது. ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சாலைச் சந்திப்பு ஒன்றில், மழை காரணமாகச் சாலை ஈரமாக இருந்த நிலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகத் தடுப்புக் கட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பிக்கப் சரக்கு வாகனத்தின் ஓட்டுநர், சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டையைக் கவனிக்காமல் அதன் மீது வேகமாக மோதியுள்ளார்.
இந்த மோதலின் வேகத்தில் அந்த இரும்புத் தடுப்புக் கட்டை காற்றில் பறந்து மறுபக்கம் இருந்த சாலைக்குத் தூக்கி வீசப்பட்டது.அந்த நேரத்தில் எதிரே இரண்டு ஸ்கூட்டர்களில் இருவர் வந்து கொண்டிருந்த நிலையில், பறந்து வந்த தடுப்புக் கட்டை சரியாக அந்த இரண்டு ஸ்கூட்டர்களுக்கு இடையே விழுந்து இடதுபுறம் வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. வலதுபுறம் வந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றித் தப்பிய நிலையில், இடதுபுறம் வந்த பெண் ஸ்கூட்டர் ஓட்டுநர் பதற்றத்தில் முன்பக்க பிரேக்கை அழுத்தியதால் வாகனம் சறுக்கிய போதிலும், தடுப்புக் கட்டை நேரடியாகத் தலையில் அல்லது உடலில் மோதுவதிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் இருவருமே ஹெல்மெட் அணியாமல் பயணித்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஈரமான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதையும் இந்தப் பதற வைக்கும் விபத்து மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
