CRIME
“அப்பா ஐ.சி.யூ-வில் இருக்கார்…” தங்கைக்காகப் பொய் சொன்ன அண்ணன்கள்.. புகுந்த வீடு சென்ற பின் மணமகளுக்குக் காத்திருந்த பேரிடி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உதய்பூர் மாவட்டம் ரிஷபதேவ் துணைப் பிரிவில் உள்ள படியார் கிராமத்தைச் சேர்ந்தவர் 51 வயதான சங்கர்லால் மேக்வால். தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு திலீப் (24), உமேஷ் (22) என்ற இரண்டு மகன்களும், பிரியங்கா (26) என்ற மகளும் உள்ளனர். மகள் பிரியங்காவுக்கு நவம்பர் 21-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முந்தைய நாளான நவம்பர் 20-ஆம் தேதி இரவு ‘பிந்தோலி’ எனப்படும் பாரம்பரியத் திருமண ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது உறவினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த சங்கர்லாலுக்குத் திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுச் சம்பவ இடத்திலேயே மயங்கிச் சரிந்தார்.
உடனடியாக அவரை ரிஷபதேவ் மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக உதய்பூர் எம்.பி. மருத்துவமனைக்கும் மகன்கள் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் மகன்கள் இருவரும் நிலைகுலைந்து போயினர். தந்தையின் உடலை மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்த திலீப்பும் உமேஷும், மறுநாள் நடைபெறவிருந்த தங்கையின் திருமணத்தை நினைத்து ஒரு கடினமான முடிவை எடுத்தனர். தந்தை இறந்த செய்தி தெரிந்தால் தாயும் தங்கையும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதோடு, திருமணமும் நின்றுவிடும் எனக் கருதிய அவர்கள், தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், பேசும் நிலையில் இல்லை என்றும் குடும்பத்தினரிடம் கூறி நம்ப வைத்தனர்.
தொடர்ந்து மணமகன் வீட்டாரைத் தொடர்பு கொண்ட மகன்கள், சூழ்நிலையைக் கூறி திருமணச் சடங்குகளை உடனடியாக நடத்தி முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலிருந்து அன்றிரவே திருமண மண்டபத்திற்கு வந்த மணமகன் வீட்டார், சடங்குகளைத் தொடங்கி நவம்பர் 21-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பிரியங்காவின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்தனர். புதுமணப் பெண் பிரியங்கா புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, அன்றைய தினமே தந்தை சங்கர்லாலின் உடல் மீட்கப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
பின்னர் மாமியார் வீட்டிலிருந்த பிரியங்காவை அழைத்துச் சகோதரர்கள் உண்மையைக் கூறியபோது, தனது தந்தையைக் கடைசி முறையாகக் கூடப் பார்க்க முடியவில்லையே எனக் கதறி அழுத பிரியங்கா, சகோதரர்கள் மீது தனது துக்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். மேலும், கணவரின் மரணச் செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் பிரியங்காவின் தாயும் உடல்நலம் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
