CRIME
“வீட்டை விட்டு வெளியே போ…” சரமாரியாகத் தாக்கி நடுத்தெருவில் விடப்பட்ட புதுப்பெண்.. கணவர் குடும்பத்தாரின் கொடூர சித்திரவதை.. இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்..!!
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில், திருமணமான நாள் முதலே வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதோடு, தன்னைத் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
ஹல்த்வானி பகுதியைச் சேர்ந்த ஹிமானி பிஷ்ட் என்ற பெண் காவல்துறையில் அளித்துள்ள புகாரில், தனக்கும் தனது கணவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். திருமணம் முடிந்த கையோடு வரதட்சணை கேட்டுத் தன்னைக் கணவரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து குத்திக்காட்டிப் பேசி, தகாத வார்த்தைகளால் திட்டி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கணவர் மற்றும் புகுந்த வீட்டார் தன்னைச் சரமாரியாகத் தாக்கியதில் படுகாயமடைந்ததாகவும், பின்னர் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் ஹிமானி தெரிவித்துள்ளார். காயமடைந்த அவர் ஹல்த்வானியில் உள்ள பேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றதோடு, அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஹிமானி பிஷ்ட் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஹல்த்வானி காவல்துறையினர், புகாரின் உண்மைத்தன்மை குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
