LATEST NEWS
“அன்பிற்கு வயதில்லை..” சொத்துக்காக வீட்டை விட்டுத் துரத்தப்பட்ட தந்தை… பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய்… 75 வயதில் முதியோர் இல்லத்தில் இணைந்த நெகிழ்ச்சி..!!
இமாச்சல பிரதேசத்தில் உள்ள முதியோர் ஆசிரமம் ஒன்றில், இரண்டு குடும்பங்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், தங்களின் வாழ்க்கையின் இறுதியில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இமாச்சலில் துனாக் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான கன்ஹையா லால், தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2022-ல் அவரின் மனைவி இறந்த பிறகு தனது சொத்துக்களை உடன்பிறந்த சகோதரர்களுக்கு மாற்றி கொடுத்துள்ளார். சிறிது காலத்திற்குப் பிறகு உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் அவரைக் கைவிட்டதைத் தொடர்ந்து, அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தங்குவதற்கு இருப்பிடம் இல்லாததால் மலையில் உள்ள ஒரு குகையில் வாழ்ந்து வந்த அவரை, ‘அப்னா கர்’ முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மீட்டனர். சுமார் 25 கைவிடப்பட்ட நபர்களைப் பராமரித்து வரும் இந்த இல்லத்தில் அவர் சேர்க்கப்பட்டார்.
இதேபோன்று, மேற்கு வங்கத்தில் கடந்த 2025-ம் ஆண்டு தனது குடும்பத்தால் கைவிடப்பட்டு இமாச்சலுக்கு வந்த 63 வயதான சபினா என்பவரையும் தன்னார்வலர்கள் மீட்டு அதே முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. தங்களின் முதிர்வயதில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் துணையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்களுக்கு முதியோர் இல்ல நிறுவனர் பிரகாஷ் சந்த் மற்றும் மாவட்ட நல அலுவலர் ரமேஷ் பன்சால் ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்தத் திருமணம் குறித்து பேசிய மாவட்ட நல அலுவலர், முதிர்வயதில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட இரண்டு பெற்றோர்கள் மீண்டும் ஒரு புதிய உறவில் இணைந்திருப்பதாகத் தெரிவித்தார். குடும்பங்களால் கைவிடப்பட்ட இவர்களுக்கு முதியோர் இல்லமும் சமூகமும் ஆதரவளித்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார். சொத்துகளை இழந்து கைவிடப்பட்ட நிலையில், தங்களுக்கு ஆதரவாக ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து இருவரும் தங்கள் இறுதிக்காலத்தை மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கியுள்ளனர்.
