LATEST NEWS
“Weekend ஓய்வு முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?” திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் விஜய்யை விளாசிய மு.க. ஸ்டாலின்.. அனல் பறக்கும் அரசியல் களம்..!!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் தீபம் ஏற்றப்பட்டுள்ள நிலையில், மாநில உரிமைகள் குறித்துத் திமுகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை எனத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, திமுகவினர் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்துக் கருத்துக் கூறவில்லை எனப் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் வரம்பு மீறிய தலையீட்டால் மாநில அரசின் உரிமைகளும் பல்லாண்டு கால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள மு.க. ஸ்டாலின், சனி மற்றும் ஞாயிறு வார இறுதி ஓய்வு முடிந்து திங்கட்கிழமையாவது முதலமைச்சர் இது குறித்துப் பேசுவாரா எனச் சாடியுள்ளார். மேலும், முதலமைச்சர் தன்னை மறைத்துக்கொண்டு அதிகாரிகளை முன்னிறுத்தி அவர்கள் மீது பழி சுமத்துவதாகவும், ஒரு மாவட்ட ஆட்சியரைக் கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் தற்போதைய முதலமைச்சரின் நிர்வாகத் திறன் என்றும் அவர் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளையும் விமர்சித்துள்ள மு.க. ஸ்டாலின், முதலமைச்சரிடம் எந்தக் கருத்தையோ அல்லது பொறுப்புக்கூறலையோ கோராமல் திமுகவைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் எனக் கேட்டுள்ளார். இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள் இப்போது அமைதி காப்பதாகவும், ஆனால் வரம்பு மீறிய தலையீடுகளால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க அரை நூற்றாண்டு காலமாகப் போராட்டங்களை நடத்தி வரும் திமுகவுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டத் திமுக என்றென்றும் உறுதியாகப் போராடும் என மு.க. ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
