LATEST NEWS
“அய்யோ காப்பாத்துங்க…” அலறியடிச்சு ஓடிய மக்கள்… வரிசையாக வாகனங்களை நசுக்கி பாய்ந்த போதை லாரி… நள்ளிரவில் நடந்த நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்.!!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கிலா பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மதுபோதையில் இருந்த லாரி டிரைவர் ஓட்டி வந்த கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. லாரியின் அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடற்ற நிலையைக் கண்ட சாலையில் இருந்த மக்கள் உயிரைத் தப்பிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் பலரும் படுகாயமடைந்த நிலையில், 40 வயதான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிலா பாலத்தின் வழியே லாரி சென்று கொண்டிருந்தபோது, அதன் ஓட்டுநர் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் முன்னே சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது லாரி மோதித் தள்ளிக்கொண்டே சென்றது. வாகனங்களை மோதிச் சேதப்படுத்திய பிறகு, அந்த லாரி அருகிலிருந்த சத்யபிரகாஷ் பூங்காவுக்குள் புகுந்து நின்றுள்ளது. இந்த விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் ஜகீரா, குப்டி பாகட் பகுதியைச் சேர்ந்த நஸீர் கானின் மகனான 40 வயது அஜீம் மியா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்புச் செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும், கிலா காவல் எல்லைக்குட்பட்ட கங்கி தோலாவைச் சேர்ந்த அப்சல் ஹுசைன் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் லாரியைக் கைப்பற்றி, ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
