LATEST NEWS
“அரசு குடுத்த நிதி என்னாச்சு..?” 12 வயது மகளை தோளில் சுமந்து 7 கி.மீ மலைப்பாதையில் நடந்த தாய்.. அதிகாரிகளின் அலட்சிய முகத்திரை கிழிந்த வைரல் வீடியோ..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில், போக்குவரத்து வசதி இல்லாததால் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது 12 வயது மகளை, ஒரு தாய் தனது தோள்களில் சுமந்தபடி 7 கிலோமீட்டர் தூரம் மலைகளையும் மேடுகளையும் கடந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நெஞ்சை உலுக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. பல்லபு துங்கத என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த ஜான்னி சுங்கரம்மா என்பவரது மகள் ஜான்னி சம்பூர்ணா (12) திடீரென கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக அந்தப் பகுதிக்கான மண் சாலை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டதாலும், அவசரக் கால ஆம்புலன்ஸ் வாகனம் கூட வர முடியாத நிலை ஏற்பட்டதாலும், அந்தத் தாய் வேறு வழியின்றி தனது மகளைத் தோளிலேயே சுமந்து கொண்டு கரடுமுரடான பாதையில் நடந்து சென்றுள்ளார்.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அவலம் என்னவென்றால், சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பே ‘பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ திட்டத்தின் கீழ் இந்த கிராமத்திற்கு 6.5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் அந்தச் சாலைப் பணி இன்றுவரை முடிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் இந்த பழங்குடியின கிராம மக்கள் நாள்தோறும் உயிருக்குப் போராடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இனியாவது அரசு அதிகாரிகள் உடனடியாகச் சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பழங்குடியின மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
