LATEST NEWS
“அடேங்கப்பா, என்ன ஒரு குறி..!” மகள்களை ‘பாகுபலி’ ரேஞ்சுக்கு வளர்க்கும் தந்தை..! நெட்டிசன்களை மிரள வைத்த சிறுமிகளின் கிக் ஸ்டண்ட்..!!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், எந்தவொரு தொழில்முறை தற்காப்புக்கலை வீரருக்கும் சளைக்காத வகையில் ஒரு தந்தை தனது இரு மகள்களுக்கு வீட்டில் வைத்து கிக் ஸ்டண்ட் பயிற்சி அளிக்கிறார். வீடியோவின் தொடக்கத்தில், அந்த தந்தை ஒரு மேஜையின் மீது வாளியை தலைகீழாகக் கவிழ்த்து வைத்து, அதற்கு மேல் பிளாஸ்டிக் பாட்டில்களை அடுக்குகிறார். பின்னர், சில அடிகள் பின்வாங்கிச் சென்று, மிகச் சரியான குறி மற்றும் அசாத்தியமான சமநிலையுடன் ஒரே உதையில் அந்த பாட்டில்களை கீழே தள்ளுகிறார். அடுத்ததாக சவாலை மேலும் கடினமாக்கி மூன்று பாட்டில்களை வைத்து, அதையும் தனது துல்லியமான கிக் மூலம் வீழ்த்தி அசத்துகிறார்.
தந்தையின் இந்த சாகசத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் அவரது இரு சிறுமிகளும், அதே ஸ்டண்ட்டை செய்து காட்டக் களமிறங்குகிறார்கள். முதலில் ஒரு மகள் முன்னே வந்து, தந்தையைப் போலவே துல்லியமாகக் குறிவைத்து பாட்டில்களை ஒரே உதையில் கீழே வீழ்த்துகிறார். அவரைத் தொடர்ந்து மற்றொரு மகளும் அதே போன்று மிகச் சிறப்பாகச் செய்து காட்டுகிறார். அந்த சிறுமிகளின் முகத்தில் இருக்கும் தன்னம்பிக்கை, அவர்களின் உடல் சமநிலை மற்றும் குறி தவறாத வேகம் ஆகியவை அவர்கள் இருவரும் தொடர்ந்து கடுமையான பயிற்சி மேற்கொண்டுள்ளதை நெட்டிசன்களுக்கு தெளிவாக உணர்த்துகிறது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்த தந்தை தனது மகள்களை எதிர்கால வீராங்கனைகளாக வளர்ப்பதாகக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு இது போன்ற முறையான தற்காப்பு மற்றும் உடற்பயிற்சிகளை அளிப்பது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிள்ளைகளுக்கு வெறும் படிப்பை மட்டும் தராமல், அவர்களுடன் நேரத்தைச் செலவழித்து இது போன்ற புதிய கலைகளைக் கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் முக்கியப் பொறுப்பு என நெட்டிசன்கள் இந்த தந்தையைப் பாராட்டித் தீர்த்து வருகின்றனர்.
