LATEST NEWS
“அண்ணா.. நாங்க ஏசி கார்ல உட்கார்ந்ததே இல்லை…” குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய கார் டிரைவர்..! சோசியல் மீடியாவை நெகிழ வைத்த வைரல் வீடியோ..!!!
சமூக ஊடகங்களில் தினமும் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே நெஞ்சைத் தொட்டு வைரலாகின்றன. அந்த வகையில், அகமதாபாத் பகுதியில் எளிய பின்னணியைச் சேர்ந்த ஒரு சிறுவனும், அவனது அக்காவும் சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு காரை ஆசையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது காரில் இருந்த நபரிடம் அந்தச் சிறுமி மிகவும் கள்ளமில்லா அப்பாவித்தனத்துடன்,”நாங்கள் இதுவரை ஏசி காரில் அமர்ந்ததே இல்லை, உங்கள் காரில் எங்களை ஒருமுறை ஏற்றிக்கொள்ள முடியுமா?” என்று ஆசையாகக் கேட்டுள்ளார். குழந்தைகளின் இந்த எளிய கோரிக்கையையும் அவர்களின் முகத்தில் இருந்த ஆசையையும் பார்த்த கார் உரிமையாளர், யோசிக்காமல் அவர்களைத் தனது காரில் ஏற்றிக்கொண்டார்.
காரில் ஏறியவுடன் அந்தச் சிறுவன் தனக்குக் கேக் சாப்பிட வேண்டும் என்ற தனது குட்டி ஆசையை வெளிப்படுத்தினான். அதே சமயம், அந்தச் சிறுமி கார் ஓட்டுநரிடம், “காரை அப்படியே எங்கள் அத்தையின் வீட்டின் முன்னால் ஓட்டிச் செல்லுங்கள், நாங்கள் ஏசி காரில் செல்வதை அவர்களும் பார்க்கட்டும்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். பலர் தங்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைக்கும் ஒரு விஷயம், மற்ற சிலருக்கு ஒரு பெரிய கனவாக இருக்கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. மேலும், அந்த நபர் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கினார். தங்களுக்குத் தெரிந்த நபர் என்பதால் மட்டுமே காரில் ஏறியதாகக் குறிப்பிட்ட அந்தக் குழந்தைகள் இருவரையும், அவர் கேக் கடைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குக் கேக் வாங்கிக் கொடுத்தார்.
கேக் சாப்பிட்ட பிறகு அந்தக் குழந்தைகளின் முகத்தில் மலர்ந்த புன்னகையும் மகிழ்ச்சியும் ஒட்டுமொத்த உலகத்தையே வென்றது போல் இருந்தது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளதுடன் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி விலையுயர்ந்த பொருட்களில் இல்லை, இதுபோன்ற சிறிய தருணங்களில்தான் மறைந்திருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளின் கள்ளமில்லா புன்னகையையும், அந்த கார் ஓட்டுநரின் கனிவான மனிதநேயத்தையும் சமூக வலைத்தளவாசிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
