LATEST NEWS
“கட்டியிருந்த சேலையைக் கழற்றிக் கொடுத்து காப்பாத்தினாங்க… எனக்கு அவங்க சிவன்-பார்வதியாவே தெரிஞ்சாங்க..! வெளிநாடு போன பிறகுதான் புரியுது… உண்மையிலேயே நம்ம இந்தியா ஒரு சொர்க்க பூமி..! நேபாள வெள்ளத்தில் மரண பயத்தைக் கண்டு உயிருடன் மீண்ட பெண்ணின் பரபரப்புப் பேட்டி..!!”
நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிருடன் மீண்டு வந்த திருச்சி உறையூரைச் சேர்ந்த சிவரஞ்சனி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துள்ளார். அதில், கைலாஷ் மானசரோவர் செல்வது தனது வாழ்நாளின் கனவு என்பதால், கடந்த 23-ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் மூலம் 21 பேர் கொண்ட குழுவாகப் பயணம் மேற்கொண்டதாகத் தெரிவித்தார். பயணம் சிறப்பாகச் சென்று கொண்டிருந்த நிலையில், கைரோ எம்பஸிக்கு 3 கிலோமீட்டர் தொலைவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரெனக் கரும் புகையுடன் வெள்ள நீர் சீறிப் பாய்ந்து வந்து அணைத்தையும் அடித்துச் சென்றது. அதிர்ஷ்டவசமாக இவர்களது வாகனம் ஒரு வளைவில் நின்றதால் கடவுளின் அருளால் அனைவரும் உயிர் தப்பினர்.
வாகனத்தில் இருந்த அட்டெண்டர் ஓடிவிட்ட நிலையில், வாகனத்தில் இருந்து வெளியேற முடியாதவர்களை மயிலாடுதுறையைச் சேர்ந்த பூங்குழலி மற்றும் ரத்தினகுமார் ஆகியோர் மீட்டு மேலே ஏற்றினர். குறிப்பாக பூங்குழலி தான் கட்டியிருந்த சேலையைக் கழற்றிக் கொடுத்து, ஆபத்தில் சிக்கிய மற்றவர்களைக் காப்பாற்றிய நிகழ்வு தங்களுக்குச் சிவன்-பார்வதியையே நேரில் பார்த்தது போல் நெகிழ்ச்சியாக இருந்தது என்று சிவரஞ்சனி குறிப்பிட்டார். பின்னர் அவர்கள் அருகில் இருந்த ராணுவ முகாமில் த தஞ்சமடைந்தனர். அங்குத் தங்குவதற்கு இடம் கிடைத்ததால் கடும் பனியில் உறைந்து போகாமல் தப்பிக்க முடிந்ததாகவும், 57 பேர் யாத்திரைக்குச் சென்ற நிலையில் மற்றவர்களின் நிலையை நினைத்து வருந்துவதாகவும் அவர்கள் நலமுடன் திரும்ப இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
முகாமில் சிரமப்பட்ட சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உறவினர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தங்களைத் தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு பத்திரமாக மீட்டு வந்ததாகக் கூறினார். மீட்பு நடவடிக்கைகளுக்குத் தமிழக மற்றும் மத்திய அமைச்சர்கள் சிறப்பான ஒத்துழைப்பை அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவைத் தாண்டி வெளியூர் சென்றால்தான் நம் நாட்டின் அருமை புரிகிறது என்றும், உண்மையிலேயே இந்தியா ஒரு சொர்க்க பூமி என்றும் கூறி மத்திய, மாநில அரசுகளுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
