LATEST NEWS
“டிக்டாக் வீடியோவில் நான் அவங்கள பார்த்தேன்… கடைசியா இருந்தது அந்த பாலத்துக்கிட்ட தான்..!” நேபாள வெள்ளத்தில் மாயமான தாய்-அத்தை இருப்பிடத்தை கண்டுபிடித்த மகள் வெளியிட்ட உருக்கமான தகவல்..!!
இங்கிலாந்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தனது தாய் மற்றும் அத்தை பெருவெள்ள பேரிடரில் சிக்கி காணாமல் போனதையடுத்து, அவர்கள் கடைசியாக எடுத்த டிக்டாக் வீடியோ மற்றும் ஜிபிஎஸ் சிக்னல் மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, அவர்களை தொடர்ந்து தேடி வருவதாக படேல் என்பவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து 33 பேர் அடங்கிய குழு ஒன்று, நேபாள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 675-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 13 வயது சிறுவன் உட்பட 33 பிரிட்டிஷ் நாட்டினரும் காணாமல் போயுள்ளனர்.
இந்த குழுவினருடன் இணைந்து ஹேமங்கினி ஜிதேந்திர படேலின் தாயார் துளசி படேல் மற்றும் அவரின் அத்தை ஹேமா சுனில் அமீன் ஆகியோர் திபெத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, நேபாளத்திற்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட பெருவெள்ளத்தில் படேலின் தாயாரும் அத்தையும் காணாமல் போன நிலையில், அவர்களை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் படேலால் முடியாமல் போனது. இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த படேல், தனது தாயாரும் அத்தையும் திபெத் செல்வதற்காக ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே முயற்சிகளை செய்து வந்ததாகக் கூறினார்.
மேலும், அவர்கள் காணாமல் போனதை அடுத்து, உள்ளூர் நேபாள சுற்றுலா வழிகாட்டி ஒருவர் எடுத்திருந்த டிக்டாக் வீடியோவை தான் கண்டறிந்ததாகவும், அதில் தனது அம்மா மற்றும் அத்தையின் புகைப்படங்கள் இருந்ததாகவும் படேல் கூறினார். நேபாள-சீன எல்லையில் உள்ள ‘நட்பு பாலம்’ என்ற இடத்தில் சுற்றுலா குழுவிடம் இருந்து கிடைத்த ஜிபிஎஸ் சிக்னல் மூலம், அவர்கள் கடைசியாக இருந்த இடம் தெரியவந்ததாகவும், வழிகாட்டியிடம் உள்ளூர் சிம்கார்டு இருக்கும் என்பதால் அவருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்தார். ஆபத்து நிறைந்த பகுதி என்பதால் நேரடியாக நேபாளம் செல்லும் முடிவைக் கைவிட்டு, தற்போது மீட்புக் குழுவினரின் உதவியுடன் அவர்களைத் தொடர்ந்து தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
