LATEST NEWS
“என்னை கொன்று விடுவார்கள்… தயவுசெய்து காப்பாற்றுங்கள்…!” பிரசவ வார்டில் கதறிய 25 வயது தாய் குழந்தையோடு பரிதாப பலி… வீடியோவால் அம்பலமான பகீர் உண்மை..!!
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் ஹட்வா பகுதியைச் சேர்ந்த கல்பனா என்ற கர்ப்பிணி பெண், தனது முதல் குழந்தையைப் பிரசவிப்பதற்காக சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி, “என்னை இப்படி நடத்துவது தொடர்ந்தால், மருத்துவமனை ஊழியர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்; தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள்” என்று அவர் அழுதுகொண்டே கதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், குழந்தையைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே அந்தப் பெண்ணும் பச்சிளம் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
கல்பனா உயிரிழப்பதற்கு முன் பதிவான அந்த வீடியோவில், அவர் மிகுந்த மன உளைச்சலுடன் பிரசவ வார்டில் இருந்து வெளியேற முயற்சிப்பதும், உறவினர்களைத் தொடர்புகொள்ள முயல்வதும் பதிவாகியுள்ளது. அப்போது செவிலியர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோது, ஊழியர் ஒருவர் “உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்று கேட்டதாகவும், தனக்குச் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்று கல்பனா குற்றம் சாட்டியதும் தெரியவந்துள்ளது. இதனிடையே, மயக்க மருந்து அதிகளவில் கொடுக்கப்பட்டதே மகளின் மரணத்திற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அவரது தந்தை, அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை இடைநீக்கம் செய்து அவர்கள் மீது FIR பதிவு செய்ய வேண்டும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை பிரேதப் பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மருத்துவ நெறிமுறைகளின்படியே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் தரப்பில் எந்தவித அலட்சியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், கர்ப்பிணி மற்றும் குழந்தையின் உயிரிழப்பு குறித்து விரிவாக விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
