CRIME
நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! ஆக்ரா ரயிலில் சூட்கேஸ்… கூடுவாஞ்சேரி வீட்டில் பிரியாணி அண்டாவில் மனித கறி..! பெண்ணை கொன்று உடலை கூறுபோட்ட கள்ளக்காதலன் செய்த பகீர் செயல்..! திடுக்கிடும் பின்னணி..!!
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டியில் உரிமை கோரப்படாத நிலையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேசை ஆக்ரா போலீசார் சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். அதில் தலை இல்லாத மனித எலும்புக்கூடுகளும் உடல் உறுப்புகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்டிரல் ரயில் நிலைய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு ஆணும் பெண்ணும் அந்த சூட்கேசை ரயிலில் ஏற்றிவிட்டு கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்றது தெரியவந்தது. போலீசார் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு பூட்டிய வீட்டில் சோதனை செய்தபோது, பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில் மைதா மாவு கலக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித சதைப்பகுதிகள் துர்நாற்றத்துடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தடயவியல் பரிசோதனையில் ரயிலில் சிக்கிய எலும்புகளும், வீட்டில் கைப்பற்றப்பட்ட சதைப்பகுதிகளும் ஒரே நபருடையது என உறுதியானது. கொல்லப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என்பதும், அவர் தாம்பரம் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் தங்கியிருந்த வீட்டில் கடந்த 2 மாதங்களாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மணிக்உத்தீன் லஸ்கர் என்ற வாலிபரும், ஒடிசாவைச் சேர்ந்த பகவதி மாஜி என்ற பெண்ணும் தங்கியிருந்துள்ளனர். கள்ளத்தொடர்பு காரணமாக எழுந்த தகராறில் ஹயாத் நிஷாவை கொலை செய்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து தலைமறைவான தம்பதியைத் தேடி அசாம் சென்ற தனிப்படை போலீசார், அவர்கள் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள காசிம்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதை அறிந்தது. மணிப்பூர் போலீசாரின் உதவியுடன் மணிக்உத்தீன் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கைதான இருவரையும் தமிழகத்திற்கு அழைத்து வந்து, கொலை நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், இந்த கொடூர கொலையின் முழுமையான பின்னணியைக் கண்டறியவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
