LATEST NEWS
ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு அதிரடி கெடு..! இனி இது தெரியலனா வேலைக்கே ஆபத்து… மத்திய அரசு போட்ட புது ரூல்..!!
இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகளுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்த பயிற்சிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வழிகாட்டுதலின்படி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவரும் ‘ஐ கோட் கர்மயோகி’ இணையதளம் மூலம் பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளை ஆண்டுதோறும் கட்டாயம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பயிற்சிகளில் அதிகாரிகளின் செயல்பாடு அவர்களின் ஆண்டு செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில் பிரதிபலிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் பணிக்காலத்தின் அடிப்படையில் மொத்தம் 24 பயிற்சிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் 6 பயிற்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் பெற்ற முதல் பிரிவினர் வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிமுகம், தேடுதல்-பறிமுதல் நடைமுறைகள் மற்றும் சைபர் பாதுகாப்பு அடிப்படைப் பயிற்சிகளைப் பெறுவார்கள். 16 ஆண்டுகள் வரையிலான அனுபவம் கொண்ட இரண்டாம் பிரிவினருக்குத் தொழில்நுட்ப அறிமுகம் மற்றும் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு முறைகள் குறித்தும்; 16 முதல் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூன்றாம் பிரிவினருக்குச் சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், சாட்.ஜி.பி.டி. போன்ற ‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ’ கருவிகளின் பயன்பாடு மற்றும் தகவல் தொடர்புத் திறன்கள் குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
25 ஆண்டுகளுக்கும் மேல் பணி அனுபவம் கொண்ட நான்காம் பிரிவு அதிகாரிகளுக்கு, முதல் மூன்று பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளுடன் சேர்த்து அவர்களின் ஒருங்கிணைந்த உடல் மற்றும் மன நலன் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
