LATEST NEWS
பெரும் சோகம்..! 3 முறை தங்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை.. விளையாட்டு உலகை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!
இந்தியாவின் முன்னணி பாரா தடகள வீரரும், மூன்று முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான நீரஜ் யாதவ் (42), தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தை, இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது 7 வயதில் போலியோ பாதிப்பால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கிய நீரஜ் யாதவ், மனமுடையாமல் தடகளத்திற்கு மாறி ‘F55’ பிரிவில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய ஒரு பெரும் சாம்பியன் ஆவார். 2018 ஜகார்த்தா ஆசிய பாரா போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கமும், 2023 ஹாங்சூ போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் இரண்டிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தார். இருப்பினும், ஊக்கமருந்து சோதனையில் (Doping Test) தோல்வியடைந்ததால் அவரது முந்தைய பதக்கங்கள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஊக்கமருந்து தடையின் காரணமாக, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நீரஜ் இழந்தார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும், நிதி மற்றும் வேலைவாய்ப்பு ரீதியான இழப்புகளுக்கும் ஆளாகியிருந்ததே அவர் இந்த விபரீத முடிவை எடுக்கக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துயரச் சம்பவம் குறித்த பின்னணி குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
