LATEST NEWS
தூக்கத்துலயே முடிந்த உயிர்..! அலாரம் அடித்தும் எழாத நண்பன்… கையை பார்த்து அலறிய நண்பர்கள்… கல்லூரி மாணவனின் மர்ம மரணத்தால் நள்ளிரவில் போர்க்களமாக மாறிய வளாகம்..!!
ராஜஸ்தான் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விடுதியில் பி.டெக் முதலாமாண்டு மாணவர் அக்ஷித் சர்மா சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த இந்த மாணவர், சம்பவத்திற்கு முந்தைய நாள் இரத்த தானம் செய்துவிட்டு நண்பர்களுடன் கால்பந்து விளையாடியுள்ளார். மறுநாள் காலை அலாரம் அடித்தும் அவர் எழாததால், அறையிலிருந்த நண்பர் சென்று பார்த்தபோது அவரது ஒரு கை நீல நிறமாக மாறிய நிலையில் அசைவற்று கிடந்துள்ளார். அதைத் தொடர்ந்து மருத்துவமனை பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
மாணவரின் இறப்பிற்கான காரணம் குறித்து இருவேறு தகவல்கள் கூறப்படுகின்றன. விடுதி வளாகத்தில் நச்சுப் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், மாணவர் கை நீல நிறமாக மாறியதை வைத்து அவரை பாம்பு கடித்திருக்கலாம் என்று சக மாணவர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மருத்துவர்கள் முதற்கட்ட ஆய்வின் அடிப்படையில், மாணவர் அதிகாலை தூக்கத்திலேயே ‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். மாணவரின் அறை முதல் தளத்தில் இருப்பதால் பாம்பு கடிக்க வாய்ப்பு குறைவு என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க விடுதி நிர்வாகமும் தலைமை வார்டனும் ஆம்புலன்ஸை சரியான நேரத்தில் அழைக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முதன்மை நுழைவுவாயிலை பூட்டி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர் மாணவர்கள் மீது லாத்திசார்ஜ் நடத்தியதில் பலருக்குக் காயம் ஏற்பட்டதுடன், இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், காவல்துறையின் அதிரடி நடவடிக்கைக்குப் பிறகும் மாணவர்கள் நள்ளிரவு வரையிலும் வளாக வாயிலில் அமர்ந்து தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
