LATEST NEWS
“போஸ்டர் ஒட்டியவனுக்கு என்ன மரியாதை..?” உடையும் தவெக… தவெக-வில் அமைச்சர் கீர்த்தனா, MLA கார்த்திக் ஓரங்கட்டுவதாக ஆதரவாளர்கள் குமுறல்..!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் வடமேற்கு மாவட்டப் பொறுப்பில் இருக்கும் மாரிசெல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கட்சியின் தற்போதைய செயல்பாடுகளால் கடுமையான குமுறலில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்ப காலத்திலிருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்து, கட்சியின் வளர்ச்சிக்கும் திரைப்பட போஸ்டர்கள் ஒட்டுவதற்கும் சொந்தக் காசைச் செலவழித்து உழைத்த தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மாரிசெல்வத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த விருதுநகர் வடமேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகாசி தொகுதிக்கு தவெக-வைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு தொகுதியான ஸ்ரீவில்லிபுத்தூரில் அத்தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான (MLA) கார்த்திக் தனி விளம்பரம் செய்து, தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மாரிசெல்வத்தின் அதிகார வரம்பு சுருங்கி வருவதாக அவரது தரப்பினர் வேதனைப்படுகின்றனர்.
கட்சியின் ஆரம்ப கால உழைப்பாளியான மாரிசெல்வத்திற்கு, அமைச்சர் கீர்த்தனா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகிய இருவருமே உரிய மரியாதையைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்றைக்கு வேறு கட்சிகளில் இருந்துவிட்டு இன்று பதவிகளை அனுபவிப்பவர்கள், காலம் காலமாக உழைத்த தங்களை ஓரம் கட்டுவதாக மாரிசெல்வத்தின் ஆதரவாளர்கள் குமுறுவது தவெக உட்கட்சி வட்டாரத்தில் தற்போதைய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
