CINEMA
“ஆட்சியை கவுக்க முடியாது பாஸ்”.. எக்ஸ்ட்ரா 10 ரூபாய் சர்ச்சைக்கு கூல் சுரேஷ் கொடுத்த மரண மாஸ் ரிப்ளை..!!
வித்தியாசமான விளம்பர உத்திகளால் எப்போதும் இணையத்தில் பேசுபொருளாக இருக்கும் நடிகர் கூல் சுரேஷ், தற்போது ‘இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சிலர் பார்ட்டி’ பட விழாவில் காவல்துறை அதிகாரி உடையில் வந்து கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிறகு தமிழ்நாட்டில் இனிமேல் யாருமே மது அருந்த மாட்டார்கள் என்றும், அதற்கு இயக்குநரைத் தாண்டி தமிழ்நாட்டைப் போதை இல்லாத மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் தான் முக்கியக் காரணம் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை எப்படியாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே, சிலர் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று எக்ஸ்ட்ரா பத்து, இருபது ரூபாய் வாங்குவது குறித்து வீடியோ போட்டு மலிவான விளம்பரம் தேடுவதாகக் கடுமையாகச் சாடினார்.
அவ்வாறு வீடியோ போடுபவர்களை நோக்கி கேள்வி எழுப்பிய கூல் சுரேஷ், “வீட்டு அடுப்பு எரிவதற்காக வரும் சிலிண்டருக்கு டெலிவரி செய்பவர்கள் எக்ஸ்ட்ராவாக 50 ரூபாய் வாங்குகிறார்களே, அதைப்பற்றி இதுவரை யாராவது வாயைத் திறந்து வீடியோ போட்டதுண்டா?” என்று ஆவேசமாகக் கேட்டார். பிரபலமாவதற்காக மட்டுமே டாஸ்மாக் கடைகளில் சண்டை போட்டு திட்டமிட்டு வீடியோ போடுவதாகக் குறிப்பிட்ட அவர், எந்தக் கொம்பன் வந்தாலும் தமிழகத்தில் தவெக ஆட்சியை, நம்ம விஜய் சாரின் ஆட்சியை யாராலும் தடுக்கவோ, கவிழ்க்கவோ முடியாது என்றும், அதற்கு மிகச் சிறந்த உதாரணமே இந்த ‘இன்ஸ்பெக்டர் சூர்யா’ திரைப்படம் என்றும் மேடையில் அதிரடியாகப் பேசி அரங்கை அதிர வைத்தார்.
