LATEST NEWS
ஆசிரியர்களுக்கு செக்.! இனி பணி நேரத்தில் யாரும் வெளியே செல்லக்கூடாது.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!
பள்ளி பணிநேரத்தில் ஆசிரியர்கள் தங்களது பணிகளைத் தவிர்த்துவிட்டு தேவையின்றி வெளியே செல்லக்கூடாது என்றும், மதிய உணவு இடைவேளையின்போதும் பள்ளி வளாகத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. கோவையில் சாதிய பாகுபாடு காரணமாக பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையின்படி, பள்ளி வளாகங்களில் ஏதேனும் அசாதாரண சூழலோ அல்லது மாணவர்களிடையே தேவையற்ற மோதல்களோ ஏற்பட்டால், பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக தங்களது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, உரிய ஆலோசனைகளைப் பெற்றுச் நிலைமையைக் கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வரும் நேரம் முதல் வெளியேறும் நேரம் வரை அவர்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர்களே முழுப் பொறுப்பு என்பதும் இதில் மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளது.
மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர்கள் வெளியே செல்வதால் பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் கண்காணிப்பதில் தொய்வு ஏற்படுகிறது என்ற புகார்களின் அடிப்படையிலும், இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கும் நோக்கிலும் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த அதிரடி உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
