LATEST NEWS
சத்யபாமா இல்லீங்க..! “பல்டி பாமா… பெட்டி பாமா” தாராபுரத்தை உலுக்கும் திமுகவின் சூட்கேஸ் பிரசாரம்…!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உட்பட 6 தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த அடுத்த கணமே அவர்கள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இச்செயல் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தவெக மிகப்பெரிய அளவில் ‘குதிரை பேரம்’ பேசி இந்த எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், தவெகவுக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியாகிச் சில நாட்களிலேயே எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டிய அவசரக் காரணம் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றமும் கேள்வி எழுப்பி, வழக்கின் தீவிரத்தை சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், தவெகவுக்குத் தாவிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் அக்கட்சி சார்பில் தலா ரூ.35 கோடி வரை பணமாக வழங்கப்பட்டுள்ளதாக பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தினார். இதன் காரணமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் இந்த ‘பெட்டி’ விவகாரம் மிக முக்கியப் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகக் கொட்டமுத்தாம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன், தங்களை நம்பிய அதிமுக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் சத்தியபாமா துரோகம் இழைத்துவிட்டதாகக் கடுமையாகச் சாடினார். சத்தியபாமாவை ‘பல்டி பாமா’ என்றும் ‘பெட்டி பாமா’ என்றும் விமர்சித்த அவர், வெறும் பதவி ஆசையினாலும் பண பலத்தினாலும்தான் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் எனக் குற்றம்சாட்டினார். இந்த உரையைத் தொடர்ந்து, அங்கிருந்த திமுகவினர் கைகளில் சூட்கேஸ்களைத் தூக்கிக் காட்டி தவெகவின் குதிரை பேரத்தைக் கண்டிக்கும் வகையில் நூதன முறையில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நூதனப் பிரசாரத்தின்போது பேசிய திமுக வேட்பாளர் சுகன்யா, “சத்தியபாமா போல் நான் பெட்டியை வாங்கிக்கொண்டு மக்களைக் கைவிட்டுச் செல்ல மாட்டேன்; தொகுதி மக்களுக்காக என் வாழ்நாளின் கடைசி வரை உண்மையாக உழைப்பேன்” என்று உறுதியளித்து மக்களிடம் ஆதரவு திரட்டினார். சின்னக்கம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திமுகவினர் கையில் பெட்டியுடன் நடத்திய இந்த வித்தியாசமான பிரசாரம் பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. தாராபுரம் இடைத்தேர்தல் களம் தவெகவின் பண பலம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவல் விவகாரங்களால் தற்போது பெரும் அரசியல் சூட்டை எட்டியுள்ளது.
