LATEST NEWS
“தைரியமா இரு சுகன்யா..!” அடுத்த தேர்தலில் பார்த்துக்கலாம்.. தோல்வியால் துவண்டு போன தாராபுரம் திமுக வேட்பாளரை தேற்றிய மு.க.ஸ்டாலின்..!!
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமவிடம் திமுக வேட்பாளர் சுகன்யா தோல்வியைத் தழுவியுள்ளார். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், அவருக்குத் தனது அர்சமய ஆறுதல்களையும் தைரியத்தையும் வழங்கியுள்ளார். இந்தத் தேர்தல் முடிவு திமுக வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த போன் கால் அக்கட்சியினரிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொலைபேசி உரையாடலின் போது வேட்பாளர் சுகன்யாவிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “என்ன பண்றது விடுங்க.. கடந்த தேர்தலில் நாம் வாங்கிய வாக்குகளை இந்த முறையும் பெற்று விட்டோம்..! அதனால் நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் தைரியமாக இருங்கள், அடுத்த தேர்தல்களில் நாம் பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறி நெகிழ்ச்சியுடன் ஆறுதல் படுத்தியுள்ளார். தேர்தல் தோல்வியால் சோர்ந்து போயிருந்த வேட்பாளருக்கும், ஸ்டாலினின் இந்த வார்த்தைகள் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெகவின் விசில் சின்னம் வெற்றி பெற்றுள்ள சூழலில், திமுக தலைமை தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துள்ளதை இந்த உரையாடல் சுட்டிக்காட்டுகிறது. தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், அடுத்த கட்டமாக வரவிருக்கும் தேர்தல்களுக்கு இப்போதிருந்தே அடிமட்டப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தை இந்தத் தொலைபேசி அழைப்பு தாராபுரம் தொகுதி திமுகவினருக்கு ஏற்படுத்தியுள்ளது.
