LATEST NEWS
எடப்பாடி தலையில் விழுந்த இடி..! அதிமுகவிலிருந்து விலகி விஜய்யின் கட்சியில் இணைந்த தீப்பொறி முருகேசன்..!!
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவை நோக்கித் தங்களது அரசியல் பயணத்தைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நெல்லை மாவட்டத்திலும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணையும் நிகழ்வுகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன.
அதன்படி, நேற்று திருநெல்வேலி மத்திய மாநகர் மாவட்ட தவெக செயலாளர் மரிய ஜான் முன்னிலையில், அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகியான தீப்பொறி முருகேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை முறைப்படி தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தேர்தல் வெற்றிகள் தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், நெல்லையில் நடைபெற்றுள்ள இந்த இணைப்பு விழா அக்கட்சியினரால் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த இணைப்பு நிகழ்வின் போது, தவெகவின் முக்கியப் பொறுப்பாளர்களான வழக்கறிஞர் எம்.சி.ராஜன் மற்றும் கே.என்.சின்னத்துரை ஆகியோர் உடனிருந்து புதிய உறுப்பினர்களைக் கட்சிக்குள் வரவேற்றனர். இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து தவெகவிற்கு நிர்வாகிகள் தாவுவது தொடர்கதையாகி வருவதால், வரும் நாட்களில் மேலும் பல முக்கியப் புள்ளிகள் விஜய்யின் தவெக கட்சியில் இணைவார்கள் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
